மனசு திருடி


ஊடலுடன் தொடங்கும்
பாசங்குத் தனமான
பொய் கோபமும்
அபிநயங்களுடன் கூடிய
உன் போலியான
அழுகையும் புன்னகையும்
எனை விட்டு நீ
தள்ளி தூரமாயிருந்தாலும் கூட
கனவுலகத்திற்கு
பிரஜையாக்குகின்றன
என்னை.

உன்
செயல்களிலும் பார்வைகளிலும்
பிரதிபலிக்கும் கிறுக்குத்தனத்தையும்
எனை வெறுப்பேற்றும்
சின்னச் சின்ன சீண்டல்களையும்
ரசித்து வைக்கிறேன்
உன் மீதான
நேசத்தில்.

பேசி சிரித்து
விடை பெற்று கைஆட்டி
போகும் போது
வாசலுக்குச் சென்று
தூரப்பார்வையால்
எனை அளக்கும் போது
சொல்லித் தா!
மனசை திருடும் கலையை.

வார்த்தைகள்



வழி நெடுக
வார்த்தைகள்
இறைந்து கிடைக்கின்றன.
எனக்கான
வார்த்தைகளை
எவ்வாறு தேர்ந்தெடுந்து
பொறுக்குவது - என
திளைத்து தத்தளிக்கையில்
தூக்கி வெளியே
எறிந்தன.
எனக்கான வார்த்தைகள்
என்னை.

தாய் ஆனவன்


நினைவுகளில்
வழிந்தோடுகிறது - உன்
மிருதுவான நேசம்
நெஞ்சை வருடியபடி.

சுவாசம் மறக்கும்
இதயம் - உன்
நினைவுகளின் பாரம்
தாங்காமல்.

உபயோகப் படும்
சில
சிதறி விழும்
சொற்களைக் கூட
மௌனம் இறுக்க
அடைத்துக் கொள்ளும்.

எதிரில் கிடக்கும்
ரோஜா - உன்
இதழ்களை
ஞாபகப் படுத்தும்.

கனவுகளை
உண்ணும்
உன் நினைவுகள்
உறக்கத்தோடு இழப்பேன்
என்னையும்.

வானம் எதிரிலிருந்தும்
மேகம் பிரிக்கும்
இடைவெளி.

ஒளித் திரையில்
மறைந்தாலும் என்னுள்
முழுவதுமாய்
நிறைந்திருக்கும் நீ!

நேசி




நேசி

எனை நேசி

இல்லா விட்டால்

உன்னையாவது நேசி,

உனக்குள் இருக்கும்

எனக்காக.

செலவு


கனவுகளிடையே
தான்
நிற்கிறது
உனக்கும்
எனக்குமான வாழ்க்கை.

எதிர்கொள்ளும்
பொழுதில்
தவறவிட்ட வார்த்தைகளைத்
தனிமையில்
எனக்கு நானே
பேசிக் கொள்வதில் கழியும்
உன் நினைவுகளைப்
போலவே
இக்கவிதை எழுதுவதற்கான
நேரங்களும் - மிக
நுண்ணிய கணங்களாக
கரைந்து கொண்டு.

காலம் தகரம் போன்றது


நாட் குறிப்பின்
வெற்றுத் தாள்கள்
தீர்ந்துக் கொண்டிருக்கின்றன.

நீண்ட நேரம்
உரையாடும் நட்பையும்
கலைந்து போகச்
சொல்லும்.

கற்பனை வேறு
மரணம் செய்து கொள்ளுவதாய்
நிழலாடுகின்றன.

விருப்பமான
மலரையும்
தள்ளி வைத்துவிடச்
சொல்லி விட்டேன்.

தனிமையில் இறுகும்
நரம்புகளுக்காக
இமைகளை
இறுக்கி மூடி
பல்லைக் கடித்துக்
கொள்ளுவதே
வழிகளெனாயிற்று.

உன்னை
கடந்து போக
போகிறேன் - இன்னும்
அடிவானத் தொலைவு தான்
முடமான கால்களுடன்.

உனக்காக
காத்திருக்கும் பொழுதுகள்
எனக்கு தகரம் தான்.





தூறல்


எதேச்சையாகத் தான்
தென்றல் மெல்லத்
தழுவுவது போலத்தான்
நம் காதல் என் மனதில்
அரங்கேறியது.

உன் சின்ன
ஒரு புன்னகை
மூலம்தான் - நீ
என்னுள் வந்தாய்.

இதழ்கள் மூடிய
மலரால் காதலை - நீ
மௌனத்தால் சொன்ன போது
சந்தோசத்தைக் கண்ணீரால்
வாங்கிக் கொண்டேன்.

மெதுவாய் ஒவ்வொரு
சந்திப்பிலும் நம்முள்
இடைவெளி குறைந்து
மென்மையாக ஆட்கொண்டாய்.

"மழையின் போது
மண்ணின் மணம்
எனக்குப் பிடிக்கும்"
எனச் சொல்லி மழைத்தூரலில் - உன்
அணைப்பில் நடந்தது
மழை இப்போது
வேதனையுடன்
வருடிச் செல்கிறது.

"அவசியமின்று
ஆறுமணிக்குச்
சந்திக்கிறோம்"
சொல்லிக் காத்திருந்த
போது மறந்திருந்த
என்னை
உனக்கு யார் ஞாபகப்படுத்துவார்கள்
உறைக்கவே
இல்லை எனக்கு.

கடந்து போகும்
பேருந்தில் தெரியாமல்
துப்பிய எச்சில் முகத்தில்
பட்ட அருவெறுப்பாய்த்
தான் இருக்கிறது - நீ
"மறந்து விடு" என்று
தள்ளி நின்றுச்
சொன்ன வார்த்தைகள்.

என் புகைப்படம்

உங்களோடு நானும் வலையுலகில்...

உலகம் வலையின் கதகதப்புக்குள் சுகமாய் முடங்கிக்கிடக்கிறது. வலையுலகைத் தவிர்த்துவிட்டு சுற்ற முடியாதளவு பூமியின் பயணம் குறுகிப்போயிருக்கிறது. அறிவின் சேகரங்களைச் சேகரித்துக்கொண்டு பயணித்துக்கொண்டிருக்கும் வலையுலகின் ஏதாவதொரு கண்ணியில் எனது சிறகுகளும் இணைக்கப்படட்டும். ஒவ்வொரு அரிசியிலும் இறைவன், பெயர் எழுதியிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கும் கதைகளை மனசு நம்ப மறுத்தாலும் உலகின் ஒவ்வொரு மணல் துகளிலும் என் காலடித்தடங்களின் தூசு படிய வேண்டும் என்கிற பேராசை மட்டும் இருக்கிறது. சாத்தியப்படும்போது சந்திப்போம். உள்ளம் திறந்து உரையாடுவோம்.