தூறல்


எதேச்சையாகத் தான்
தென்றல் மெல்லத்
தழுவுவது போலத்தான்
நம் காதல் என் மனதில்
அரங்கேறியது.

உன் சின்ன
ஒரு புன்னகை
மூலம்தான் - நீ
என்னுள் வந்தாய்.

இதழ்கள் மூடிய
மலரால் காதலை - நீ
மௌனத்தால் சொன்ன போது
சந்தோசத்தைக் கண்ணீரால்
வாங்கிக் கொண்டேன்.

மெதுவாய் ஒவ்வொரு
சந்திப்பிலும் நம்முள்
இடைவெளி குறைந்து
மென்மையாக ஆட்கொண்டாய்.

"மழையின் போது
மண்ணின் மணம்
எனக்குப் பிடிக்கும்"
எனச் சொல்லி மழைத்தூரலில் - உன்
அணைப்பில் நடந்தது
மழை இப்போது
வேதனையுடன்
வருடிச் செல்கிறது.

"அவசியமின்று
ஆறுமணிக்குச்
சந்திக்கிறோம்"
சொல்லிக் காத்திருந்த
போது மறந்திருந்த
என்னை
உனக்கு யார் ஞாபகப்படுத்துவார்கள்
உறைக்கவே
இல்லை எனக்கு.

கடந்து போகும்
பேருந்தில் தெரியாமல்
துப்பிய எச்சில் முகத்தில்
பட்ட அருவெறுப்பாய்த்
தான் இருக்கிறது - நீ
"மறந்து விடு" என்று
தள்ளி நின்றுச்
சொன்ன வார்த்தைகள்.

No comments: